தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

10-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் நீங்கலாக இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

9-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், குன்னூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.