வணிகவரித்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64.21 கோடி வரிவசூல்!

வணிகவரித் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து 22,430 வணிகர்கள் மூலம் ரூ.64 கோடி வரி வசூல் செலுத்தி இருப்பதாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகவரித் துறையால் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள் கடந்த நிதியாண்டு (2021-2022)ல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதேபோல், சுமார் 94 லட்சம் வணிகர்கள், ரூ.1000க்கும் கீழ் மட்டுமே சரக்கு மற்றும் சேவைகள் வரியினை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியது கண்டறியப்பட்டது.

வணிகவரி கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்திடுமாறு அவ்வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அதன் விளைவாக மே 2022ல் 22430 வணிகர்கள் ரூ.64.21 கோடி வரித்தொகையினை அரசிற்கு செலுத்தியுள்ளனர். 22,430 வணிகர்கள் கிட்டதட்ட ரூ.64 கோடி அரசிற்கு செலுத்தியுள்ள நிகழ்வு இதுவரை வரி செலுத்தாமல் உள்ள வணிகர்களையும் வரி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய வணிகர்கள் அனைவரும் உடனடியாக தங்களது கணக்கை சரிபார்த்து அரசிற்கு செலுத்த வேண்டிய வரித்தொகை ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக செலுத்தி அபராதம் மற்றும் வட்டியினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் வணிக வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.