முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது.
இந்நிலையில், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு 16.12.2021 அன்று அரசாணை வெளியிட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, (10-ம் தேதி) சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 11.1.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு (பொதுத்துறை நிறுவனம்) அதற்கான ஆணையை வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 886 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,600 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம்.
அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.