திருவண்ணாமலை மாவட்டத்தில் 671 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த 671 பேர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் இறந்தவர்கள் குறித்த பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. அந்த பட்டியல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தந்த தாலுகாவில் கொரோனாவால் இறந்தவர்கள் பகுதிக்கு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் சென்று விசாரணை செய்ய மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணை 3 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினர் எத்தனை பேர் உள்ளனர்? என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.