கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசு தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதார நிலையத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
தமிழக முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் பராமரிப்பு குறித்து 9 மாவட்டங்களில் உள்ள 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒன்றிய அரசின் சுகாதாரக் குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை ஆய்வு செய்தனர்.
இதில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியாலெப்சான் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதிப்பெண்கள் பெற்று மேல்வில்வராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.
இங்கு அடிப்படை வசதிகள், தரமான சிகிச்சை, நோயாளிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடு உள்ளதாக தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகள் செய்து தருவதன் மூலம் மேல்வில்வராயநல்லூர், மேலாரணி, சேங்கபுத்தேரி மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.