சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக புதன் கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று (17.11.2022) இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18ஆம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். முதல் நாள் தமிழகம் , கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், மீண்டும் கன மழை பெய்த நிலையில் கொட்டும் மழையில் தரிசனம் செய்ய வரிசையில் நீண்ட தூரம் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்த படியே ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பி காத்திருந்து தரிசனம் செய்தனர். தீபாராதனையை தொடர்ந்து 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை அதனை தொடர்ந்து இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும். தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
November 15, 2024