முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.5 கோடி வரையிலான திட்ட முதலீட்டிற்கு 25 சதவீதம் அதிகபட்ச மானியமாக ரூ.50 லட்சம் வரை வழங்கி வந்தது. தற்போது மானிய தொகையை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் கல்வி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. படித்து தேர்வு பெற்ற மகளிர் மற்றும் பொது பிரிவினர் அல்லாதவர்கள் 21 வயது முடிந்து 45 வயதுக்குள்ளும், பொது பிரிவினராக இருந்தால் 21 வயது முதல் 35 வயது வரைக்கும் உள்ள மனுதாரர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதன்பின், விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து இரு நகல்களாக மாற்று சான்றிதழ், கல்வி தகுதி சான்று, விரிவான திட்ட அறிக்கை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைப்புள்ளி மற்றும் புகைப்படம் 2 ஆகிய இணைப்புகளுடன் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள திருவண்ணாமலை வேளாண்மைத் துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் திரு. பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.