திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் செய்ய ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த அனுமதி சீட்டுகள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் இணையதளம் வழியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாளை (04.12.2022 – ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது. கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.
கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.