நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அப்ரெண்டிஸ் (பயிற்சி பணி) பணிக்கு ஆட்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு.. தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெளிவாக காணலாம்.
மொத்த பயிற்சி பணியிடங்கள்:
மொத்தம் 6,160 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 648 தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி பிரிவினர் 123 பேரும் எஸ்.டி பிரிவினர் 6 பேரும் ஒபிசி பிரிவில் 174 பேரும் EWS பிரிவில் 281 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படும். தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் உண்டா?
இந்த பயிற்சி பணியிடங்களை பொறுத்தவரை மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பிற சலுகைகள் எதுவும் வழங்க முடியாது. ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்தை எந்த வித பிரச்சினைகளும் இன்றி முடித்தவர்களுக்கு ஜூனியர் அஸ்சோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்பும் போது வெயிட்டேஜ் மற்றும் தளர்வுகள் வழங்கப்படும். இது பற்றிய விவரம் அவ்வப்போது வெளியிடப்படும்.
தேர்வு கட்டணம்:
தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை, ஈரோடு,மதுரை, நாகர்கோவில், சேலம் , தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.09.2023 ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.