தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூரை சென்றடையும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்கவோ, போனில் ‘செல்பி’ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறும் போது, அணையிலும் அணையை ஒட்டி உள்ள கரையோர பகுதிகளில் இருக்கும் முதலைகள் அடித்து வரப்பட்டு ஆற்று நீரில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.